நடிகை காஜல் பசுபதி தனக்கு தீடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்த வாரம் திருமணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், ரசிகர்கள் பலரும் இதை நம்ப முடியாமல் ரியலா, ரீலா என்று கேட்டு வருகின்றனர்.
நடிகை காஜல் பசுபதி தனது நடிப்பு கரியரை சின்னத்திரையில் தொடங்கி சினிமாவுக்குள் வந்தவர். ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமான காஜல் பசுபதி இதுவரை ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம் , கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மௌன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, இருவர், கலகலப்பு 2 என பல திரைப்படங்களில் நடித்து கவனத்தைப் பெற்றுள்ளார்.
சன் டிவியின் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின்போது, நடிகை காஜல் பசுபதி அந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றிய சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் விரைவில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சினிமாக்களில் நடன இயக்குனராக பிஸியாக இருக்கும் சாண்டி, சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டில் இருந்தபோது அந்த நிகழ்ச்சிக்கு சாண்டியின் 2வது மனைவி சில்வியா வந்ததன் மூலம் அவரும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இந்த நிலையில், சாண்டியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை காஜல் பசுபதி, மணமுறிவுக்கு காரணம் நான்தான் அதிக பாசம் காரணமாக சாண்டியை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டதாகத் கூறியிருந்தார். தனியாக வசித்து வரும் காஜல் பசுபதி இப்போதும் சாண்டியுடன் தோழியாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காஜல் பசுபதி, தனக்கு திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் திருமணம் என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நடிகை காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது….அடுத்த வாரம் திருமணம்….கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல.. தப்பா எடுத்துக்காதிங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது திருமணம் பற்றி குறிப்பிட்டுள்ள காஜல் பசுபதி, மணமகன் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதனால், அவர் நடிக்க உள்ள நிகழ்ச்சி அல்லது அவர் நடித்துள்ள திரைப்படத்தின் புரமோசனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இது ரியலா ரீலா என்று கேட்டு வருகிறார்கள். இருப்பினும், ரசிகர்கள் சிலர் அவருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"