அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது என நடிகை கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.
இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள படம் ‘ப்ளூ ஸ்டார்’. இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்த படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
இந்தநிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்ததால் நான் நடிக்க சம்மதித்தேன்.
இயக்குனர் பா.ரஞ்சித் படத்தைத் தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தவறு?. நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம். எல்லாப் படங்களிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தப் படத்தில் என் குரலும் இருப்பது பெருமையாக இருக்கிறது.
இன்றைக்கு இந்த நாளில், இந்த விழா நடப்பது மிகவும் முக்கியமானது. இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு பாடிய வரிகளின் படி, ’காலு மேல காலு போடு ராவணகுலமே’ என்று பாடத் தோன்றுகிறது.” இவ்வாறு கீர்த்தி பாண்டியன் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“