நடிகர் அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இருந்து திடீரென விவசாயியாக மாறி நிலத்தில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90-களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தம்பா என்ற படத்தில் அறிமுகமானார். காட்டில் நடக்கும் சாகசப் படமான தம்பா படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கினார். இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பு பேசப்பட்டது.
கீர்த்தி பாண்டியன் அண்மையில் தனது தந்தையுடன் இணைந்து முதல் முறையாக மலையாளத்தில் நடித்த ஹெலன் படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாரட்டினர். ஹெலன் ஒரு ரீமேக் படம். ஒரு குளிர்ந்த அறைக்குள் சிக்கிக்கொளளும் ஒரு இளம் பெண்ணைப் பற்றிய கதையைக் கொண்ட இந்தப் படத்தில் அன்னா பென் என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், நடிகைகள் பலரும் இந்த குவாரண்டைன் நாட்களை பயனுள்ள வகையில் செலவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி பாண்டியன் நிலத்தில் டிராக்டரை ஓட்டி விவசாயி அவதாரம் எடுத்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டும் அந்த வீடியோவைப் பற்றி குறிப்பிடுகையில், “விவசாயம் செய்வது தொடங்கியது. இது பொது இடம் அல்ல. இது தனிமைப்படுத்தப்பட்ட வீட்டு சொத்து. நாம் மிகவும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
விவசாய நிலத்தில் கீர்த்தி சுரேஷ் டிராக்டர் ஓட்டும் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"