கேரளாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் எனக்கு தாமரை மலர வேண்டும் என்று கூறியிருப்பது அவர் காங்கிரஸ் கட்சியை விரும்பாதவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்மான தமிழ்நாடு புதுச்சேரி அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 100-க்கு மேற்பட்ட தொகுதிகளில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவாக இன்று கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றதுள்ளது.
இதில் 20 தொகுதிகளை கொண்ட கேரளா மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கேரளாவின் அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில் முன்னாள் நடிகையும் தற்போதைய நடிகை கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்கு செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த மேனகா, தேர்தலில் ஒரே மாதிரியான முடிவுகள் வந்தால் நன்றாக இருக்காது. மாற்றம் வர வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான நிர்வாகம் நடந்து வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இதனால் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை என் மனதில் உள்ளது. என்னை பொறுத்தவரை தாமரை மலர வேண்டும் என்பது தான் என் ஆசை என்று கூறியுள்ளார்.
மேலும், கேரளாவில் இதுவரை பாஜக வரவில்லை. இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி தான் மாறி மாறி ஆட்சியில் இருக்கிறது. ஒரு மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும். தாமரை வெற்றி பெற நிறைய வாய்ப்பு உள்ளது. மக்களிடம் பேசும்போது தெரிகிறது. முடிவு என்பது மக்கள் கையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேனகா சுரேஷின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“