கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றது. குறிப்பாக, தென்னிந்திய முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் இந்த திருமணம் அரங்கேறியது.
இதைத் தொடர்ந்து, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதன்படி, திருமணத்தின் மெஹந்தி விழா புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தற்போது பதிவிட்டுள்ளார்.
இதில் ஒரு புகைப்படத்தில், மணமகள் என்று எழுதப்பட்ட காதணியை கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
மற்றொரு புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான மேனாகா, கீர்த்தி சுரேஷின் கைகளில் மருதாணி போட்டு விடுகிறார். இதற்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, நிச்சயதார்த்த நிகழ்வின் போது கீர்த்தி சுரேஷ், வெள்ளை நிற உடை அணிந்திருந்த புகைப்படங்களும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கீர்த்தி சுரேஷின் கணவர் அந்தோனி தட்டில், துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.
அண்மையில், 'பேபி ஜான்' என்ற திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் வருண் தவான், சல்மான் கான், வாமிகா, ஜாக்கி ஷெரோஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம், கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.