நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்துகொள்வதற்காக நடிகை குஷ்பு மதம் மாறினார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு தற்போது குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
80-90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள குஷ்பு கடந்த 2000-ம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இயக்கம் நடிப்பு என சுந்தர்.சி-யும், அரசியல் நடிப்பு என்று குஷ்புவும் பிஸியாக இருந்து வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் குஷ்பு குறித்து அவ்வப்போது சில சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு சுந்தர்.சி.-யை திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறினார் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என் திருமணத்தை கேள்வி கேட்பவர்கள், அல்லது நான் என் கணவரை திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவு செய்து கொஞ்சம் அறிவு பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இருக்கும் ‘சிறப்பு திருமணச் சட்டம்’ பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று நினைக்கிறேன். நான் மதம் மாறவும் இல்லை, அவ்வாறு கேட்கவும் இல்லை. எனது 23 வருட திருமணம் நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. எனவே சந்தேகம் உள்ளவர்கள் தயவு செய்து மலையேறவும். உங்களுக்கு இது தேவையா என்று கேட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“