மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் மஞ்சுவாரியார் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்த நிலையில், அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களும், மஞ்சு வாரியார்க்கு தமிழில் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மஞ்சு வாரியார் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளார். ஆர்யா கௌதம் கார்த்திக் நடிப்பில் தயாராக உள்ள மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடிக்க மஞ்சு வாரியார் கமிட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் மஞ்சு வாரியார் தனது 3-வது தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் தாயாராகி வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமாக பிரின்ஸ் பிச்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியார் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிஸ்’டர் எக்ஸ் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் 2024-ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பு, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“