ஜீ5 ஆப்பில் வெளியாக கரோலின் காமாட்சி துப்பறியும் வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ள நடிகை மீனா அந்த தொடரின் டீசரின் இறுதியில் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளார்.
இணைய வசதி பரவலான பிறகு இந்திய மொழிகளில் வெப் சிரீஸ் தொடர்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதனால், ஸ்டார் நெட்வொக்கின் ஹாட் ஸ்டார், ஜீ நெட்வோர்க்கின் ஜீ 5, நெட்ஃபிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், பல முன்னணி நடிகர்கள் சினிமா, டிவியில் நடிப்பதோடு வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றனர்.
சில வெப் சீரிஸ்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளாக வந்தவர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர்.அந்த வகையில், ஜீ நெட்வொர்க்கான ஜீ5 ஆப்பில் வெளியாகவுள்ள கரோலின் காமாட்சி வெப் சீரிஸில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்த மீனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது அதன் டீசரில் தெரியவந்துள்ளது. கரோலின் காமாட்சி என்பது நகைச்சுவை கலந்த ஒரு துப்பறியும் கிரைம் தொடர் என்பது தெரிகிறது.
நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த்தின் அன்புள்ள ரஜினிகாந்த் நடித்தார். பின்னர், ரஜினி, படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்தார். அதுமட்டுமில்லாமல், ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அவர் நடித்து முன்னணி நடிகையா வலம் வந்தார்.
மீனாவுக்கு படவாய்ப்புகள் குறைந்த பிறகு அவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய்க்கு மகளாக நடித்து அனைவரின் அன்பையும் கவர்ந்தார்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை மீனா அண்மையில் டிவி நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே சினிமாவில் சகோதரியாகவும் நடித்துவந்தார்.
இந்த நிலையில்தான், நடிகை மீனா ஜீ5 ஆப்பில் வெளியாக உள்ள கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த வெப் சீரிஸின் டீசரில், மீனா மிரட்டும்படியாக நடித்துள்ளார். இதில் நடிகை மீனாவுடன் ஒய்.ஜீ.மகேந்திரன், ஜார்ஜியா அந்திரனி ஆகியோர் நடிக்கின்றனர்.
மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ள இந்த வெப் சீரிஸ் டீசரின் இறுதியில் நடிகை மீனா பேசும் கெட்டவார்த்தைகளைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இதுபோன்ற கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்புகின்றனர். இருப்பினும், இந்த வெப் சீரிஸ் நடிகை மீனாவின் இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.