பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த முறை இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மீரா மிதுனை கைது செய்த போலீஸார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
பயில்வான் ரங்கநாதன் கைது ஆவாரா? பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவு செய்வதாக புகார்
அப்போது, தன்னுடைய உடல் நிலை பாதிக்கபட்டிருந்த காரணத்தினால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தனக்கெதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற வேண்டும் எனவும் மீரா மிதுன் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மீரா மிதுனை ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “