கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கியிருந்தப்போது நடிகைகள் வந்ததாக அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி கடும் சர்ச்சையாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏ.வி.ராஜுவை நடிகை ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டியில் கூறினார். இதையடுத்து ஏ.வி.ராஜுவை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு , சென்னையை அடுத்த கூவத்தூரில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து சில விவகாரங்களை தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி பேட்டி அளித்த ஏ.வி ராஜூ, "எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்த தெரியாமல் நடத்தி வருகிறார். கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தானே இவர். இவருக்கு எப்படி அ.தி.மு.க.,வின் கட்சி விதிகள் தெரியும். கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.
நீ சாதாரண ஒரு எம்.எல்.ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் என்று தெரியும். அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் என்ன கூத்து அடித்தார்.. என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எல்லாம் தெரியும். அந்த பிரபல நடிகையை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். கருணாஸ் அங்கே இருந்தார். அவர்தான் ஏற்பாடு செய்தார். இதற்கெல்லாம் காசு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். இதற்கு நான் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது. ஆனால் இதெல்லாம் நடந்தது. என்னை நீக்கியது போல அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க இயலுமா? அப்படி 2 மாவட்ட செயலாளர்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" இவ்வாறு ஏவி ராஜூ பேட்டி அளித்தார். இந்த பேட்டி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
மேலும், பலரும் ஏ.வி ராஜூவிற்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில், ஏ.வி.ராஜூவை நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஷர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”என்ன முட்டாள்தனமாக இவர் பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் உள்ள பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... எந்த ஊடக கவனமும் இல்லாமல் ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“