நடிகை நமிதா தனது மச்சான்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் ஒன்றை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த ஹாப்பி நியூஸ் என்னவென்றால், நமிதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக கவர்ச்சிப் புயலாக வலம் வந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில், விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமான நமிதா கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கினார். தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். நமிதா தனது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும்போது ரசிகர்கள் அனைவரும் அவ்வளவு உற்சாகம் அடைவார்கள். நமிதாவின் மச்சான்ஸ் என்ற செல்லமான அழைப்புக்காக ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தனர்.
நடிகை நமிதா, கோலிவுட்டில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பின்னர், நமிதாவிற்கு தொடர்ந்து, சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று வந்தார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நமிதா தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை நவம்பர் 24, 2017-இல் திருமணம் செய்து கொண்டார். நமிதா திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதே நேரத்தில், நமிதா பாஜக-வில் சேர்ந்து அரசியல் பிரவேசம் செய்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில்தான், நடிகை நமிதா, சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். நமிதா திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 40வது பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக நமிதா அறிவித்தார்.
இது குறித்து நமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தாய்மை, புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன்.உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று குறிப்பிட்டு என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, நமிதா தான் கர்ப்பமாக இருப்பதை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, நடிகை நமிதா தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ஹாப்பி நியூஸை தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நடிகை நமிதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அறிந்து நமிதாவின் மச்சான்ஸ் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”