மனிதர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் மிக அவசியம் என நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "இரண்டு விஷயங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த இரண்டு விஷயங்களையும் நான் என் வாழ்வில் நம்புகிறேன். அந்த வகையில் தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை நான் பெரிதும் நம்புகிறேன்.
எந்த சூழலிலும் இந்த இரு விஷயங்களையும் நாம் இழக்க கூடாது. நம்மை கீழே இறக்க யார் நினைத்தாலும், இந்த இரு விஷயங்களையும் நாம் எப்போதும் கைவிட்டு விடக் கூடாது. இதை எல்லோரும் பின்பற்றினால், அனைவரது வாழ்வும் மிக அழகாக மாறிவிடும்.
நம் மீது நமக்கு நம்பிக்கையும், மரியாதையும் முதன்மையாக இருத்தல் அவசியம். இதை விட வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். நாம் கடினமாக உழைக்கும் போது தன்னம்பிக்கை வரும்.
மற்றவர்கள் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் நமது வேலையை உண்மையாக, தொடர்ந்து செய்ய வேண்டும். இதை தொடர்ச்சியாக பின்பற்றினால் தன்னம்பிக்கை நமக்கு வரும். இதன் மூலம் நமது வாழ்வு மாற்றமடைந்து விடும்" என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.