/indian-express-tamil/media/media_files/2025/10/01/nayanthara-2025-10-01-10-19-14.jpg)
நெட்ஃப்ளிக்ஸில் நீக்கப்பட்ட நயன்தாராவின் சர்ச்சை படம்; ஜியோ ஹாட் ஸ்டாரில் மீண்டும் ரிலீஸ்; சர்ச்சை காட்சிகள் இருக்குமா?
கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அன்னப்பூரணி’. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்,
ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
‘ஜீ ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மற்றும் ‘டிரடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் எப்படி தன் தடைகளை தாண்டி சமையல் கலைஞர் ஆகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்களம். ‘அன்னப்பூரணி’ திரைப்படம் வெளியான அதே மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
மேலும், இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், படத்தில் இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்வதாக தெரிந்தார்.
தொடந்து, லவ் ஜிகாத் கலாச்சாரத்தை சில காட்சிகள் ஊக்குவிப்பதாகவும் நடிகர் ஜெய்யின் கதாபாத்திரம்
ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃப்ளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்போராட்டம் நடத்தினர். பிறகு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து ’அன்னபூரணி’ திரைப்படம் நீக்கப்பட்டது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நயன்தாரா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ’அன்னப்பூரணி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதாவது, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப்படம் டப் செய்யப்பட்ட இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.