தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், அவரை கடந்த 9 ஜூன் 2022 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு தற்போது உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தைவிக் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார்கள்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண டாக்மென்ட்ரி வருகிற 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் மீது அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தனுசுக்கு எழுதியிருக்கும் கடிதம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக எனக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் சில தவறான நடவடிக்கைகளை பொதுவெளியில் முன் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான அண்ணன் திரு.கே. செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்களும் உங்களது மலிவான செயல்களை புரிந்துகொண்டு, இனியாவது சரி செய்து கொள்ளுங்கள்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்.
உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பாங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், இனிமையான நினைவுகளை சுமக்கும் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள நல்ல மனம் கொண்ட பலரும் உடனடியாக சம்மதம் தெரிவித்த நிலையில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) பெறுவதற்கான எங்கள் எல்லாப் போராட்டங்களும் தோல்வியடைந்தன. 2 ஆண்டுகளாக காத்திருந்தும் எந்தவித பலனும் அளிக்காத நிலையிலேயே, மீண்டும் படப்பிடிப்பை நடத்தி, மறு தொகுப்பு செய்து தற்போது வெளியாகவுள்ள ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.
தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ. 10,00,00,000 (ரூ.10 கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
ஒரு தயாரிப்பாளர் அவரது படங்களில் பணியாற்றும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முடியுமா என்ன?. நீங்கள் தயாரிப்பாளர்தானே தவிர, சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பேரரசன் இல்லை.
சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்பி ரைட் காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன.
‘நானும் ரௌடிதான்’ வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல்ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.
எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்த அறிக்கையின் வாயிலாக வேண்டிக் கொள்கிறேன்.
இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், உங்களுக்கு தெரிந்தவர்கள் கூட உயரங்களை அடையலாம். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரண மனிதர்களும் பெரிதாக வெற்றிகளைப் பெறலாம். யார் வேண்டுமானாலும் நண்பர்கள் உடனான தொடர்பால் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்களிடம் இருக்கும் எதுவொன்றையும் எவரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை.
அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் "ஷாடன்ஃப்ரூட்" (Schadenfreude) எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (ஷாடன்ஃப்ரூட்- வேறொருவரின் துரதிர்ஷ்டத்தைப் பார்ப்பதன் மூலம் வரும் மகிழ்ச்சி அல்லது திருப்தி டையும் உணர்வு).
“மகிழ்வித்து மகிழ்” என்பதே உண்மையான மகிழ்ச்சி. கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்வை எல்லோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனால், ஏறும் எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் “Spread Love” என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.