கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகை நிகிலா விமல் களத்தில் இறங்கியுள்ள வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே வயநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு, 200-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் அளித்து வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கான தமிழக அரசின் சார்பில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு இன்று கேரளா முதல்வர் பிணராயி விஜயனை சந்தித்து வழங்கினார். இதனிடையே வயநாடு பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கேரளா மாநிலத்தில் இயங்கி வரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து நடிகை நிகிலா விமல் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நிவாரணை பொருட்கள் குறித்த விபரங்களை பதிவிடும் நிகில விமல் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“