”ஒருநாள் கூத்து” என்ற படத்தில் நடிகர் தினேஸுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
தொடர்ந்து ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ’திமிரு புடிச்சவன்’ ஆகியப் படங்களில் நடித்தார். தற்போது, ’பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
மதுரையைச் சேர்ந்தவரான நிவேதாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் சொந்த ஊரிலேயே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இவர்.
என்ன விஷயம் என யோசிக்கிறீர்களா?
சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற நிவேதா, கோயிலுக்குள் தான் எடுத்துக் கொண்ட படங்களையும், அங்குள்ள வளையல் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோவையும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இது எப்படி சர்ச்சையாகும் என கேட்கிறீர்களா?
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்களுடைய மொபைல் போனை பாதுகாப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் அங்கு செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு பக்தர்கள் வந்தால் கூட தீவிர சோதனைக்குப் பின் தான் அனுமதிக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல முடியாது. அதோடு, மொபைல் போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடையும் அங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் நடிகை என்பதால் நிவேதா பெத்துராஜுக்கு மட்டும் சிறப்பு சலுகையா என பக்தர்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டினர். பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டார் நிவேதா.
இருப்பினும் இந்த விஷயம் சம்பந்தமாக, இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை.