தனக்கு ஏற்பட்ட கடும் உடல் நல பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதாக நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் பணியாற்றிய பவித்ரா லட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டு பலர் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக, இதில் கோமாளியாக பங்கேற்ற புகழுக்கும், பவித்ரா லட்சுமிக்கும் இடையே காமெடி காம்பினேஷன் அட்டகாசமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பில், சினிமாவிலும் தனது பயணத்தை பவித்ரா லட்சுமி தொடங்கினார்.
அதன்படி, நடிகர் சதீஷ் கதாநாயகனாக களமிறங்கிய 'நாய் சேகர்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அவர் நுழைந்தார். இதைத் தொடர்ந்து, வேறு சில படங்களிலும் நடிப்பதற்கு பவித்ரா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளில், உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் சில வதந்திகள் பரவிய நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாகவே, எடை குறைந்ததாக முன்னர் பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பவித்ரா லட்சுமி ஒரு வீடியோ பதிவிட்டார். இதனால், மீண்டும் சிலர் அவருக்கு என்னவானது என்று கேள்வி எழுப்பினர். மேலும், எதற்காக வெயிட் லாஸ் செய்தார் என்று சிலர் கேட்டனர். இதைத் தொடர்ந்து, தான் வெயிட் லாஸ் செய்யவில்லை என்று பவித்ரா லட்சுமி மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, "தற்போது என்னுடைய தோற்றத்தை பார்த்து, எதற்காக வெயிட் லாஸ் செய்தேன் என்று கேட்கின்றனர். ஆனால், உடல் எடை குறைப்புக்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. கடுமையான உடல் நல பாதிப்பு ஏற்பட்டதன் காரணத்தினால் தான், இந்த அளவிற்கு எடை குறைப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன்" என்று பவித்ரா லட்சுமி கூறியுள்ளார்.