/indian-express-tamil/media/media_files/2025/07/20/bhagyaraj-and-radhika-2025-07-20-16-53-49.jpg)
நடிகை ராதிகா மற்றும் இயக்குநர் பாக்யராஜ் இருவருக்கும் இடையே உள்ள நட்பு குறித்து சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், பாக்யராஜுடனான தனது அனுபவங்களை, சன் டி.வி-யில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் போது நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சன் டி.வி-யின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ராதிகா அறிமுகம் ஆனார். தனது தனித்துவமான நடிப்பு திறமை மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அதன்படி, இதுவரை நந்தி விருதுகள், ஃபிலிம்வேர் விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். தமிழை போலவே தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த ராதிகா, சின்னத்திரையில் 'சித்தி', 'அண்ணாமலை', 'வாணி ராணி' உள்ளிட்ட பல சீரியல்களை செய்துள்ளார். இப்படி பல பெருமைகள் ராதிகாவிற்கு இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜுடனான தனது ஆரம்பகால அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, "பாக்யராஜ் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய படத்தில், நான் கதாநாயகியாக நடித்தேன். அப்போது, அவர் வசனம் சொல்லிக் கொடுத்த போது, நான் கவனிக்காத மாதிரி வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதனால், நான் திமிர் பிடித்த பெண் என்று இயக்குநர் பாரதிராஜாவிடம் சென்று கூறினார். குறிப்பாக, நான் சொல் பேச்சை கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால், பாரதிராஜாவும் என்னை அழைத்து எதற்காக இப்படி நடந்து கொண்டேன் என்று கேட்டார். ஆனால், வசனங்களை நான் சரியாக கற்றுக் கொண்டேன் என்று அவரிடம் கூறினேன். இதைக் கேட்ட பாக்யராஜ், நான் பொய் சொல்வதாக கூறினார். எனினும், நான் வசனத்தை சரியாக பேசிக் காண்பித்தேன்.
இது தவிர பலமுறை படப்பிடிப்பு தளத்தில் பாக்யராஜை ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறேன். இதற்கு வருத்தம் அடைந்து, அவரிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். அவர், பரவாயில்லை என்றும், தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் கூறுவார்" என பழைய நினைவுகளை நடிகை ராதிகா பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.