த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் பேசியதில் என்ன தவறு உள்ளது என நடிகை ரேகா நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் காமெடி நடிகராக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். சமீபத்தில் வெளியான விஜயின் லியோ படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். இந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று சொன்னவுடன், அவருடன் பெட்ரூம் சீன் இருக்கும் ரோஜா மற்றும் குஷ்புவை தூக்கி பெட்டில் போட்ட மாதிரி அவரையும் போடலாமா என்று நினைத்தேன். இப்போதெல்லாம் பலாத்கார காட்சியே படங்களில் வைக்கப்படுவதில்லை. 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று கூறியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். நடிகை த்ரிஷா வெளியிட்டிருந்த பதிவில், மன்சூர் அலிகானுடன் இதுவரை நடிக்காததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும் அவருடன் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கொந்தளித்து இருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட பதிவில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தனர்.
இந்தநிலையில், மன்சூர் அலிகானுக்கு நடிகை ரேகா நாயர் ஆதரவு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரேகா நாயர், வார்த்தைகளால் காயப்படுத்துவது காலங்காலமாக நடந்து வருகிறது. நான் மன்சூர் அலிகானுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், இந்த பிரச்சனையை எளிதாக முடித்திருக்கலாம். மன்சூரிடம் லோகேஷ் நேரடியாக பேசி, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வைத்து பிரச்சனையை முடித்திருக்கலாம்.
இந்த விவகாரத்தில் த்ரிஷாவுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. ஆனால் த்ரிஷா போன்ற பெரிய நடிகைகளுக்குத் தான் நடிகர் சங்கம் உள்பட அனைவரும் பொங்கி எழுகிறார்கள். சின்மயிக்கு யாருக்கு குரல் கொடுக்கல. தமன்னா பற்றி ரஜினி பேசியதற்கு யாரும் எதுவும் சொல்லல. முத்தக்காட்சி தொடர்பாக கமல், நயன்தாரா, குஷ்பூ போன்றவர்களை இன்னமும் காயப்படுத்தி வருகிறார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
மன்சூர் அலிகான் சினிமாடிக் ஆகவே பேசினார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் பொதுவெளியில் பேசியது தான் தவறு. சினிமாவில் கற்பழிப்பு காட்சிகள் எப்படி பண்ணுவாங்க என சினிமாவில் உள்ளவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களே இந்த விவகாரத்தில் முரண்பாடாக பேசுகிறார்கள். த்ரிஷாவும் மன்சூர் அலிகானும் பேசியிருந்தால் இந்தபிரச்சனை எளிதாக முடிந்திருக்கும். சமூக ஊடகங்கள் தான் இதுபோன்ற விவகாரங்களை, இப்போது தான் நடப்பது போல் பெரிதாக்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.