தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை சமந்தா தெலுங்கு சினிமா நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். நாக சைதன்யா சோபிதாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் கொண்டா சுரேகா, “நடிகை சமந்தவின் விவாகரத்துக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ்தான் காரணம்” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது; எந்த அரசியல் சதியும் இல்லை” என்று நடிகை சமந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/statement-of-samantha.jpg)
இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண்ணாக வெளியில் வந்து வேலை செய்ய, பெண்களை முட்டுக்கட்டைகளாகக் கருதாத கவர்ச்சியான துறையில் வாழ, காதலிக்க & காதலில் இருந்து வெளியேற இன்னும் எழுந்து நின்று போராடுவதற்கு, அதற்கு நிறைய தைரியமும் வலிமையும் தேவை.
கொண்டா சுரேகா காரு, இந்தப் பயணம் என்னை மாற்றியமைக்காக நான் பெருமைப்படுகிறேன் - தயவு செய்து அதை சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகள் குறிப்பிடத்தக்க கனத்தைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தனிநபரின் அந்தரங்கம் பற்றி நீங்கள் பொறுப்பாகவும் மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதற்கான எங்கள் விருப்பம் தவறான விளக்கத்தை ஏற்காது.
தெளிவுபடுத்துவதற்காக, எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடந்தது, இதில் எந்த அரசியல் சதியும் இல்லை.
தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க முடியுமா? நான் எப்பொழுதும் அரசியல் சாராதவளாகவே இருந்து வருகிறேன், தொடர்ந்து அப்படியே இருக்க விரும்புகிறேன்.” என்று நடிகை சமந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதே போல, நடிகர் நாக சைதன்யாவும், அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “நாங்கள் இருவரும் பரஸ்பர முடிவு செய்து விவாகரத்து செய்துவிட்டோம். இந்த விவகாரத்தில் பல்வேறு ஆதாரமற்ற கருத்துகள் வந்துள்ளன. எனது முன்னாள் மனைவி, எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் அமைதியாக இருந்தேன். அமைச்சர் சுரேகாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அது முற்றிலும் கேலிக்குரியது. இதை ஏற்கவே முடியாது. ஊடகத் தலைப்புச் செய்திகளில் வருவதற்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை சாதகமாக்கிக் கொள்வது வெட்கக் கேடானது” என்று நடிகர் நாக சைதன்யா என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா அமைச்சரின் கருத்துக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர். நானி ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கொண்டா சுரேகா கூறியிருப்பதாவது: “சமந்தா! எனது கருத்துகள் ஒரு தலைவர், பெண்களை இழிவுப்படுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு மட்டும் போற்றுதலுக்குரியதாக இல்லை. நீங்கள் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள். எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அந்த கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். அரசியல் கண்ணோட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ இதை பெரிதாக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், “என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை” என்று அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“