/indian-express-tamil/media/media_files/2025/08/06/sangitha-krish-2025-08-06-21-25-06.jpg)
தமிழ் எனக்கு பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும்; அங்குதான் எனக்கு மரியாதை இருக்கு: பிரபல நடிகை ஓபன்!
நடிகை மற்றும் தொகுப்பாளராகப் பிரபலமான சங்கீதா க்ரிஷ், தான் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவையே அதிகம் விரும்புவதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார். தமிழ் ரசிகர்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை எனக் கூறி, அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.
நடிகை சங்கீதா, 'பிதாமகன்', 'உயிர்', 'தனம்' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்புக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அத்துடன், தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னணிப் பாடகர் க்ரிஷை 2009-ல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் பிகைண்ட்வுட்ஸ் நடத்திய நேர்காணலில் தனது சினிமா வாழ்க்கை குறித்து சங்கீதா பேசியதாவது: "நான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால், எனக்குத் தமிழை விடத் தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும். இதற்குக் காரணம், அங்கு எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. நான் தமிழைப் பிடிக்காது என்று சொல்வதால் தமிழ் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழில் நடிக்கும்போது அங்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை.
உண்மையைச் சொல்லப்போனால், நான் தமிழ்த் திரையுலகில் யாரிடமும் வாய்ப்பு கேட்பது கிடையாது. எனக்குத் தெலுங்கில் நல்ல வரவேற்பு, நல்ல சம்பளம் மற்றும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழில் இருந்து சிலர் வாய்ப்பு கேட்டு எனக்குப் போன் செய்யும்போது, அவர்கள் மரியாதையின்றிப் பேசுகிறார்கள். 'ஏதோ அவர்களே எனக்கு வாழ்க்கை தருவது போல' பேசுகிறார்கள். 'உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்று சொல்வார்கள்.
நான்தான் அவர்களிடம் வாய்ப்பு கேட்கவில்லையே, அவர்கள்தானே என்னை அழைக்கிறார்கள்? அப்போ நான் தான் என்னுடைய மதிப்பை பற்றி அவர்களிடம் பேச வேண்டும் எனச் சொன்னால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கு இப்படிப் பேசுவது பிடிக்காது. எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும், ஆனால் அவர்கள் கொடுப்பதில்லை. இதனால்தான் நான் தமிழில் அதிகமாக நடிப்பதில்லை" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.