தொண்ணூறுகளில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கதாநாயகியாக இருந்த நடிகை சிம்ரன் வாலி படத்தில் நடனம் ஆடிய பாடலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சிம்ரன் அன்றைய காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்களின் பலரின் கனவு கதாநாயகியாக இருந்தார். அசத்தலான நடனம், ஸ்லிம்மான உடலமைப்பு, ஈர்க்கும் கண்கள் என தமிழ் சினிமாவில் ஒரு தசாப்தம் வெற்றிக்கொடி நாட்டியவர்.
நடிகை சிம்ரன் இன்றைக்கு உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் கமல், அஜித், விஜய் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், அஜித் உடன் வாலி, விஜய் உடன் துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றவர்.
தற்போது சிம்ரன் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரியாவின் வாரணம் ஆயிரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, மிஷ்கின் இயக்கத்தி துப்பறிவாளன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். அது மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு சினிமாவுடனான தனது தொடர்பை வெளிப்படுத்திவந்தார். இதன் தொடர்ச்சியாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
சிம்ரன் சினிமா, டிவி மட்டுமில்லாமல் சமூக ஊடகங்களிலும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவருகிறார்.
Never too late to dance! ????#wednesday #wednesdaymotivation #wednesdayvibes #morningvibes #Tiktok #dance #dancevideo #slimfitsimran #simran #simrandance pic.twitter.com/m0l2IMuOL7
— Simran (@SimranbaggaOffc) March 4, 2020
சிம்ரன் நடித்த படங்களில் அவர் அஜித்துடன் சேர்ந்து நடித்த வாலி படம் அவருக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘சோனா சோனா’, ‘ஏப்ரல் மாதத்தில்’ ஆகிய பாடல்கள் பிரபலமானவை. ஏப்ரல் மாதத்தில் என்ற பாடலுக்கு அஜித்துடன் சிம்ரன் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்.
வாலி படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சிம்ரன், வாலி படத்தின் ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
தற்போது சிம்ரன், விக்ரம் உடன் துருவ நட்சத்திரம், அரவிந்த்சாமியின் வணங்காமுடி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.