/indian-express-tamil/media/media_files/2025/09/13/simran-2025-09-13-10-54-42.jpg)
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்ரன்; விரைவில் படப்பிடிப்பு, சீனியர் நடிகைக்கு முக்கிய கேரக்டர்!
நடப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் தனித்துவம் காட்டி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்த சிம்ரனின் முதல் படமே தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். பின்னர், ’நேருக்கு நேர்’ , ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’, ’பிரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’, ‘ரமணா’ மற்றும் பல படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இடுப்பழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்ரன் 2000-ஆம் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகும் வலம் வந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் என டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். நடிகை சிம்ரன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சிம்ரன் கடந்த 2003-ம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறிது இடைவெளிவிட்ட சிம்ரன் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் ரீ எண்ட்ரி கொடுத்தார். பின்னர், சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ’டூரிஸ்ட் பேமிலி ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து பல படங்களில் தனது யதார்த்த நடிப்பினால் திரை உலகில் சிம்ரன் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகைகளில் ஒருவரான சிம்ரன் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார். தயாரிப்பு மட்டுமின்றி படத்தில் நடிக்கவும் உள்ளார்.
‘போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் இயக்குகிறார். படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். படத்தில் தேவயானி, நாசர் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us