நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சில நடிகர்கள், நடிகைகள் முன்னணியில் இருந்துள்ளனர். அப்படி, 2000-களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து ரசிகர்கள் நடிகை கே.ஆர். விஜயாவை புன்னகை அரசி என்று கொண்டாடினார்கள். அதே போல, 2000-களில் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை சினேகாவை புன்னகை அரசி என்று கொண்டாடினார்கள்.
இயக்குநர் சுசி கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படத்தில் அறிமுகமான சினேகாவுக்கு, முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் அழகும் அவரது புன்னகையும், அவருடைய அழகான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியக் காரணமாக இருந்தன.
நடிகை சினேகா தமிழ் சினிமாவில், கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிசியான நடிகையாக உச்சத்தில் இருந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் நடித்து கலக்கினார். அதே நேரத்தில், நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கு காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சினேகா - பிரசன்னா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளாணாற். சினேகா - பிரசன்னா திருமண வாழ்க்கை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது.
நடிகை சினேகா திருமணத்துக்கு பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜய் நடித்த ‘கோட்’ படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். கோட் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்தன. அதே நேரத்தில், சினேகாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கோட் படத்தைத் தொடர்ந்து, மேலும் சில படங்களில் நடிக்க நடிகை சினேகா ஒப்புக்கொண்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சினேகா அளித்த பேட்டியில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் உடன் புதுப்பேட்டை படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கியதாகவும் அவருடைய தந்தை சொன்னதால் நடிக்கப் ஒப்புகொண்டதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை சினேகாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. நடிகை சினேக அதில் கூறியிருப்பதாவது: “புதுப்பேட்டை கதையை நான் கேட்டபோது எனது தந்தையும் கூட இருந்தார். கதையை கேட்டுவிட்டு வந்ததும் அந்த கேரக்டரில் நடிக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. உடனே எனது அப்பாவோ, சில ஹிந்தி ஆர்ட்டிஸ்ட்டுகள் பெயரை சொல்லி அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் சொன்ன விதத்தை பார்க்கையில் உன் கேரக்டரை இயக்குநர் தவறாக காண்பிக்கமாட்டார் என்றே தோன்றுகிறது என்றார். எனது அப்பாவே அப்படி சொன்னது மிகப்பெரிய விஷயமாகப் பட்டது. ஏனெனில் அவர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அவரே அப்படி சொன்ன பிறகுதான் அந்தப் படத்தில் நடித்தேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“