ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில், மாமியாராக நடித்த சோனா மற்றும் மருமகளாக நடித்த ஷபனம் இடையே நிஜமாவே சண்டை நடந்துள்ளது. இதனால், சீரியலில் ‘ஒண்ணு அவ இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்’ என்று சொன்ன மாமியார் சோனா சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல், பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. மாரி சீரியலில் மாரி. புதுமுக ஹீரோ ஹீரோயின்களுடன் சோனா, வனிதா விஜயகுமார், சுதா சந்திரன், அபிதா, வினோதினி, தேவயாணி என சீனியர் சினிமா நடிகைகள் பலரும் பிரைம் டைமில் பார்வையாளர்களின் வரவேற்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது.
மாரி சீரியலில் மாமியார் – மருமகள் இடையே நடந்த நிஜ சண்டையில் மாமியார் சோனா சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து சின்னத்திரை வட்டாரங்கள் கூறியதாவது: “மாரி சீரியலில் ‘தாரா’ என்கிற கதாபாத்திரத்தில் சோனா வில்லி மாமியாராக நடித்து வந்தார். இவருக்கு மருமகளாக நடித்து வந்தவர் நடிகை ஷப்னம். இவர், ‘தெய்வமகள்’ போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர்.
கலகலப்பான ஷப்னம், சீரியலில் ஷூட்டிங்கின்போது வசனத்துடன் டைமிங்காக கவுண்ட்டர் கொடுப்பதில் வல்லவர். இவர் இதற்குமுன் நடித்த சீரியல்களிலும் இயக்குனர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.
மாரி சீரியலிலும் ஷப்னம் அப்படியே நடித்து வந்திருக்கிறார். மாரி சீரியலில், மாமியாருக்கு அடங்காதா மருமகளாக நடித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் நடிக்கும்போதுதான் பிரச்னையே வந்துள்ளது. அது என்ன காட்சி என்றால், மாமியார் சோனா வழுக்கி விழும்போது, மருமகள் ஷப்னம் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த காட்சி. அப்படி தாங்கிப் பிடிக்கும்போது, ஷப்னம் தனது பஞ்ச் வசனத்தை சேர்த்து அடித்துள்ளார். “என்ன அத்தை இந்த கணம் கணக்குறீங்க?” என்று ஷப்னம் கவுண்ட்டர் கொடுத்ததால் கடுப்பான சோனாவுக்கும் ஷப்னத்துக்கும் அன்றையில் இருந்து சண்டை தொடங்கி இருக்கிறது. இருவரும் வெளிப்படையாகவே, பேசி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் தயாரிப்பு குழுவும், சேனல் நிர்வாகமும் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றிருக்கிறது. இருவரும் சமாதானமாக செல்லுங்கள் என்று கூறியிருக்கிறது. ஆனால், சோனா விடுவதாக இல்லை. இந்த சீரியலில், ‘ஒண்ணு அவ இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்’ என்று கூறி ஷப்னம் உடனான காட்சிகளில் நடிக்க மறுத்துள்ளார். சோனா சமாதானம் ஆகாமல் மல்லுக் கட்டியிருக்கிறார். இதனால், சேனல் நிர்வாகம், ஒரு கட்டத்தில் சோனா போனால் போகட்டும் என்று விட்டுவிட்டிருக்கிறது. தற்போது சோனா மாரி சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“