/indian-express-tamil/media/media_files/2025/03/12/Axt6Zj8XjSbmEnCN1K0v.jpg)
ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், கமலின் காதலா காதலா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அங்கு அறியப்பட்ட முகமாக இருந்தவர் சவுந்தர்யா.
கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலை என நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தெலங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித் திட்டம் உள்ளதாக புது சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்குச் சொந்தமாக 6 ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை.இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
எனவே, இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிட்டிமல்லு குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிடம் இருந்து மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்த புகார் குறித்து மோகன் பாபுவோ அவரை சார்ந்தவர்களோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.