ஸ்ரீப்ரியா 80களில் தமிழ், தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்த ஹீரோயின்களில் ஒருவர். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் சேர்த்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து டிவி தொடரில் நடிக்கத் தொடங்கிய ஸ்ரீப்ரியா, அதன் பிறகு 'மாலினி 22 பாளையங்கோட்டை, நானே வருவேன் ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார்.
சமூக தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரீப்ரியா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உயர்மட்டக்குழு பொறுப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உருவக் கேலி செய்வதாக கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீப்ரியா ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், "விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஒருவரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை. மா.கா.பா, பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை. நீங்கள் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்ளுங்கள். மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது. #உருவகேலியைஎதிர்போம்” என்று கூறியுள்ளார்.
7, 2019
தொடர்ந்து தனது அடுத்த பதிவில், "என்னுடன் ட்விட்டரில் இனைந்து நிற்க்கும் 495.8 ஆயிரம் மக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும். நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன். இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7, 2019
ஸ்ரீப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.
இதே விஜய் டிவியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.