சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை (பிப் 22) நடைபெறவுள்ள பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. இவர் நாளை நடைபெறவுள்ள பிரபுதேவாவின் நடன நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில், திடீரென அந்நிகழ்வில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் என்னைக் காண ஆவலாக இருந்த என் ரசிகர்களுக்கு இதனை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற நான் முடிவு செய்துள்ளேன். இதனை பகிர்ந்து கொள்வதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா சாருக்கு எதிரானது அல்ல. நான் அவரது தீவிர ரசிகை. எப்போதும் அவரது ரசிகையாகவே இருப்பேன். எனினும், பாகுபாடு மற்றும் சார்பு நிலைகளை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
பல ஆண்டுகளாக ஒரு துறையில் நீங்கள் இருக்கும் போதும், உங்களுக்கான உரிமைகளை பெற போராட வேண்டியது வேதனையாக இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் ஏமாற்றமளிக்கின்றன. இவை தான் என் முடிவுக்கு காரணம்.
பிரபுதேவா சாரை கொண்டாட எனக்கு ஒரு நிகழ்வு தேவையில்லை. எப்போதுமே அவரை நாம் கொண்டாடுவோம். எனினும், இது ஒரு நேசத்திற்குரிய நிகழ்வாக அமைந்திருக்கலாம். ஆனால், இது ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது.
இது மன்னிப்புக் கடிதம் கிடையாது. மாறாக, இந்நிகழ்வில் நான் பங்கேற்கவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமாக தெரிவிக்கும் குறிப்பு. அடுத்த முறை மரியாதைக்குரிய வகையில், ஆரோக்கியமான விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன்.
திட்டமிடுவதிலும், சம்பந்தப்பட்ட கலைஞர்களை மதிப்பதிலும் கிரீயேட்டிவ் குழுவினர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்நிகழ்வை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இவ்வாறு முடிவடைந்தது துரதிர்ஷ்டவசமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.