கடந்த நவ.7 கமல்ஹாசன் தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாக, பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர்.
Advertisment
அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சாருஹாசனின் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம், "கமலை நான் சித்தப்பா என்று கூப்பிடமாட்டேன். ஏனெனில், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என நினைப்பவர் அவர். என் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களுக்கும் கமல் அவர்களே காரணம். நீங்க இல்லனா.. சினிமா துறையில் நான் இல்லை. நான் டெக்னிக்கல் சைடில் போக வேண்டும் என்றும் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து பணம் கட்டியதும் அவர் தான்.
தமிழ் பெண்கள், தென்னிந்திய பெண்கள், இந்திய பெண்கள் ஏணியின் உச்சாணியில் இருக்க வேண்டும் என்பதே கமல அவர்களின் விருப்பம். என்னுடைய தங்கை, என்னுடையா அக்கா, எனக்கு என எங்கள் மூவருக்கும் தற்காப்பு சொல்லிக் கொடுத்தவர் கமல். இப்படிப்பட்டவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... நாட்டிற்கே இப்படி ஒருத்தர் தேவை.
பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர் கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்.
மணிரத்னத்தை எனக்கு கொடுத்ததும் கமல் தான். மணியோட வாழ்க்கையும் நீங்க கொடுத்தது தான். உங்களைத் தேடி வந்ததால தான அவர் என் வாழ்க்கைக்குள்ளேயே வந்தார். அவரை நான் சந்தித்ததால் தான் என் மகன் நந்தனும் இங்கே இருக்கிறார்.
இதுவரை கமல்கிட்ட செய்யாத இரண்டு விஷயத்தை செய்யப் போகிறேன் என்று சொல்லி, கமல்ஹாசன் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சுஹாசினி, அடுத்து உங்கள் சார்பில் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி முத்தம் கொடுக்க அந்த மேடையே நெகிழ்ந்து போனது.