விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் நடுவில் சில வாரங்கள் பெரும் போராக இருந்ததால், இந்த சீரியலை விரைவில் முடித்து வையுங்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனாலும் அதன்பிறகு விறுவிறுப்பான காட்சிகளால் மீண்டும் சூடு பிடித்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது என்றும் விரைவில் முடிவடைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், சரவண விக்ரம், வி.ஜே.தீபிகா, ரொஸரியோ சந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரமோவில் ஸ்டாலின் முத்து மட்டுமே இருக்கிறார். தனம் கேரக்டரில் சுஜிதா தனுஷ்க்கு பதிலாக நடிகை நிரோஷா என்டரி ஆகியுள்ளார். அதேபோல் முதல் சீசனில் மூர்த்தி கேரக்டருக்கு 3 தம்பிகள் இருந்தார்கள்.
தற்போது 2-வது சீசனில் அவருக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். முதல் சீசன் சகோதர பாசத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2-வது சீசன் ப்ரமோவை வைத்து பார்க்கும்போது அப்பா மகன் பாசப்போராட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து தவிர சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட யாருமே 2-வது சீசனில் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் ப்ராண்டு சீரியலாக பார்க்கப்படும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தவர்கள் இதற்கு முன்பு மற்ற சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் அவர்களுக்கு அடையாளத்தை கொடுத்தது என்று சொல்லலாம். நடிகர் நடிகைகளால் சீரியலுக்கும், சீரியலால் நடிகர் நடிகைகளுக்கும் புகழ் சேர்ந்தது. இதனால் இதை மீண்டும் தொடர நினைத்து 2-வது பாகத்திற்காக சேனல் தயாராகியுள்ளது.
இந்த 2-வது பாகத்தில் நடிப்பதற்காக முதல் பாக நடிகர்களிடம் கேட்டபோது தங்களுக்கு பட வாய்ப்பும், வெப் சிரீஸ் வாய்ப்பும் குவிந்து வருவதாக கூறி நடிக்க முடியாது என்று கூறியதாகவும், இதனால் அதிருப்தியடைந்த சேனல் நிர்வாகம் முதல் சீசனில் இருந்தவர்கள் வரவர்கள் வரட்டும் வராதவர்களுக்காக புதிய ஆர்ட்டிஸ்டுகளை தேர்வு செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தாக கூறப்படுகிறது.
ஆனால் சம்பளத்தை உயர்த்துவதற்காக தான் அவர்கள் படவாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்டாலின் முத்து ஏற்கனவே 2-வது சீசனுக்கான ப்ரமோவில் வந்துவிட்டார். அடுத்து சுஜிதாவுக்கு பதிலான நிரோஷா என்டரி ஆகியுள்ள நிலையில், ஜீவா கேரக்டரில் நடித்து வந்த வெங்கட் கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாகிவிட்டார். கடைக்குட்டி கண்ணன் தற்போது பிக்பாஸ் சென்றுவிட்டார்.
மீனாவாக நடித்த ஹேமா ராஜ்குமார் அவரது அப்பா ஜனார்த்தனாக நடித்த ரவி ஆகியோர் 2-வது சீசனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், சுஜிதா தனுஷ் கதிர் கேரக்டரில் வந்த குமரன் ஆகிய இருவரும் தான் 2-வது சீசனில் இடம்பெறாத நடிகர்கள் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“