சினிமா துறையில் பல துணை நடிகர்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல சோதனைகளையும், புறக்கணிப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. நடிகை சுமதி தனது ஆரம்ப கால சினிமா அனுபவங்கள் குறித்து சினிமா உலகம் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அவர் பட்ட கஷ்டங்களையும், படப்பிடிப்பில் நடந்த வேதனையான சம்பவங்களையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுமதி, ஒரு நாளைக்கு வெறும் 80 ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், அதில் பல நேரங்களில் ஏஜெண்டுகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைவிடக் கொடுமையானது படப்பிடிப்பு தளத்தில் நடந்த புறக்கணிப்புகள். "பல நேரங்களில், சாப்பாட்டு நேரத்தில் எங்களை சாப்பிட விடாமல் தள்ளி விடுவார்கள். சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் எங்கள் தட்டைப் பிடுங்கி விடுவார்கள். சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருந்த நாட்கள் உண்டு. படப்பிடிப்பு முடிந்ததும், நடந்த சம்பவங்களை நினைத்து வீட்டுக்கு வந்து தனியாக அழுதிருக்கிறேன்," என சுமதி தனது வலிகளைப் பகிர்ந்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சேலத்திற்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரில் இருந்து, நல்ல வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு வந்த சுமதி, ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஒரு லைட்மேன், அவரது தோற்றத்தைக் கண்டு சினிமாவில் வாய்ப்பு தேடலாம் என ஆலோசனை கூற, அதைத் தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிடுகிறார்.
Advertisment
Advertisements
இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நடித்ததுதான். வடிவேலுவின் காமெடி காட்சிகளில் அவரது கதாபாத்திரங்களும், வசனங்களும் சுமதிக்கு பெரும் புகழையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தன. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு வசனத்தை தானே இம்ப்ரூவ் செய்தது பற்றியும், தவம் படத்தில் உணவு சாப்பிடும் காட்சியை ஒரே டேக்கில் முடித்து வடிவேலு மற்றும் இயக்குனரிடம் பாராட்டு பெற்றதையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
தற்போது, முன்பு வடிவேலுவுடன் தொடர்ந்து படங்களில் நடித்த காலத்துடன் ஒப்பிடும்போது, தனக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டதாக சுமதி கவலையுடன் தெரிவித்தார். தற்போது மாதத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதாகவும், சுமார் ரூ.20,000- ரூ.25,000 மட்டுமே சம்பாதிப்பதாகவும், தனது கணவர் அதைவிடக் குறைவாகவே சம்பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் சுமதி தெரிவித்தார்.