கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பன்னுவிடம் பார்வையாளர் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்தினர். அந்த பார்வையாளருக்கு பதிலளித்த டாப்ஸி பன்னு நான் தென்னிந்திய நடிகையும்கூட அதனால், தமிழ் தெலுங்கில் பேசட்டுமா என்று கேட்டு அவரை வாயடைக்க வைத்தார்.
கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல இந்தியாவின் பல மொழிகளில் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் வந்து விழாவில் கலந்துகொள்கின்றனர்.
நடிகை டாப்ஸி பன்னு சாண்ட் கி ஆங்கில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பூமி பெட்னேகர் மற்றும் பிரகாஷ் ஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ள இந்தப்படம் துப்பாக்கிச்சுடும் வீராங்கணைகளான சந்திரோ மற்றும் பிரகாஷி தோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நிலையில், 50வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் நடிகை டாப்ஸி பன்னு கலந்துகொண்டு உரையாடினார்.
டாப்ஸி பன்னு ஆங்கிலத்தில் பார்வையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் பார்வையாளர்களில் இருந்து ஒருவர் டாப்ஸி பன்னுவிடம் இந்தியில் பேச வலியுறுத்தினார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், நடிகை டாப்ஸி அந்த நபருக்கு, அனைவருக்கும் இந்தி தெரியாது. நான் ஒரு தென்னிந்திய நடிகை அதனால் நான் தமிழ், தெலுங்கில் பேசட்டுமா? என்று கேள்வி எழுப்பி டாப்ஸி பன்னு அந்த நபரை வாயடைக்க வைத்தார்.
Taapsee shuts down man who asks her to talk to hindi????????????#Taapseepannu #Tapsee pic.twitter.com/0BXh3G8ulv
— Nagarajan kumar (@tweet_nagarajan) November 24, 2019
மேலும், தான் பேசுவது அதிகமானோருக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவதாக டாப்ஸி கூறினார்.
திரைப்படவிழாவில் டாப்ஸி பன்னுவின் பதில் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்ததால் அனைவரும் கைத்தட்டி அவரைப் பாராட்டினர்.
இப்படி அனைவரும் பாராட்டும்படி நடிகை டாப்ஸி பன்னு பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் டாப்ஸிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.