நடிகை தமன்னா பயிற்சியாளர் உதவியுடன் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஆனால், இறுதியில் தமன்னாவே வெற்றி பெற்றுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வீடுகளிலேயே உள்ளனர்.
நடிகர்கள், நடிகைகள் வீடுகளில் இருந்தபடி, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகைகள் சிலர் வேடிக்கையான வீடியோக்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் சேலஞ்ச் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தலைகீழாக நிற்க முயற்சிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தமன்னா, பயிற்சியாளரின் உதவியுடன் தரையில் தலையை வைத்து இரு கால்களையும் மேலே உயர்த்தி தலைகீழாக நிற்கிறார். மேலும், தமன்னா தலைகீழாக நிற்க முயற்சிக்கும்போது அவர் கீழே விழுந்தாலும் இறுதியில் வெற்றிகரமாக தலைகீழாக நிற்கிறார்.
இந்த வீடியோ குறித்து தமன்னா குறிப்பிடுகையில், “ஒரு சில தோல்விகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு அப்புறமே வெற்றி கிடைக்கும் என்பது இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.தலைகீழா நிற்பதற்கு முன் நானும் பலமுறை விழுந்து விட்டேன். ஆனாலும் விடாமுயற்சியால் ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் தயவு செய்து இதனை யாரும் பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமன்னா தலைகீழாக நிற்கிற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"