நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 6 மாதங்களாக உலக நாடுகளை முடக்கி வைத்துள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரொனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாம், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்ய ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டனர்.
அந்த வகையில், நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அறிகுறிகள் அவரும் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"