தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா இந்த பொது முடக்க காலத்தில், டிஜிட்டல் ஒரு போதைப்பொருள் என்று கூறி அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை திரிஷா. இவர் கடந்த ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். நடிகை திரிஷா, இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்தார். இந்த குறும்படம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் சினிம நடிகைகள், நடிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் தெரிவிக்கையில், “மகிழ்ச்சிதான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள்.
வீட்டிலேயே இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், திரிஷா சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"