தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை ஊர்வசி. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், நகைச்சுவை, குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் எனப் பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றவர். அவரது நடிப்புத் திறனுக்கு, "மைக்கேல் மதன காமராஜர்" திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம். சமீபத்தில், கமல்ஹாசனுடன் அந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி கோபிநாத் அபிஷியல் யூடியூப் பக்கத்தில் அளித்த பேட்டியில் ஊர்வசி மனம் திறந்து பேசியது, ரசிகர்களிடையே மீண்டும் அந்தப் படத்தின் நினைவுகளைத் தூண்டியுள்ளது.
Advertisment
கமல்ஹாசனின் நடிப்பில், தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், 1990-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கமல்ஹாசன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதேபோல், இந்தப் படத்தில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை ஊர்வசி. இந்தப் படத்தில் அவர் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்தக் காணொளியில், படப்பிடிப்பின் முதல் நாள் அனுபவத்தை ஊர்வசி விவரித்தார். ஊர்வசி "கட்டிங்" என்ற வசனத்தைப் பல விதங்களில் சொல்லிப் பார்த்த அனுபவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாள், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அம்மா வீட்டில் நடைபெற்றதாக அவர் கூறுகிறார். அப்போது, கேமரா பொசிஷன்களைப் பார்த்த பிறகு, கமல்ஹாசன் முதல் நாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டாராம். இதனால் ஊர்வசி சலிப்படைந்ததாகவும், "ஒரு டேக் கூட எடுக்கலையே" என்று வருந்தியதாகவும் கூறுகிறார்.
Advertisment
Advertisements
மறுநாள், ரிகர்சல் இல்லாமல் நேரடியாக டேக் எடுக்கத் தொடங்கியபோது ஊர்வசி திகைத்துப்போனார். கமல்ஹாசன், முதல் நாள் நடந்த ரிகர்சலை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். கிரேசி மோகனின் உதவியுடன் வசனங்களை ஒருமுறை ஒத்திகை செய்ததை நினைவில் கொண்டு, ஊர்வசி ஒரே டேக்கில் காட்சியைப் படமாக்கி முடித்திருக்கிறார். "கட்டிங்" என்ற வசனத்தைச் சொன்ன பிறகு, ஊர்வசிக்கு மிகுந்த நிம்மதி ஏற்பட்டதாகக் கூறுகிறார். இருப்பினும், அந்தக் காட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் மீண்டும் எடுக்கப்பட்டதாம்.