/indian-express-tamil/media/media_files/2025/07/06/rajini-and-kamal-2025-07-06-15-14-49.jpg)
பொதுவாகவே, தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு திரையுலகில் நிலைத்து நிற்பவர்கள் அதிகம். இவர்களால், எந்த விதமான பாத்திரங்களாக இருந்தாலும் அதனை மிக எளிதாக செய்து விட முடியும்.
அந்த வகையில், தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகையாக திகழ்பவர் வடிவுக்கரசி. இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே கிடையாது என்று கூறலாம். அந்த வகையில், பல்வேறு காலகட்டத்தை சேர்ந்த நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை வடிவுக்கரசிக்கு இருக்கிறது.
பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'சிவப்பு ரோஜாக்கள்' திரைப்படத்தின் மூலமாக தனது கலைப்பயணத்தை வடிவுக்கரசி தொடங்கினார். ஒரு நடிகை கதாநாயகியாக, அம்மாவாக, சித்தியாக, அத்தையாக, பாட்டியாக என பல பாத்திரங்களில் நடிக்க முடியும்.
ஆனால், ஒரே நடிகருக்கே இத்தனை பாத்திரங்களில் நடித்த பெருமை வடிவுக்கரசிக்கு இருக்கிறது. அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துடன் இத்தனை பாத்திரங்களில் வடிவுக்கரசி நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த தனது அனுபவங்களை 'தி சினிமா கிளப் 25' என்ற யூடியூப் சேனலில் மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜேஷுடனான நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில சுவாரசிய நிகழ்வுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு அண்ணியாக நடித்தேன். இது தவிர மிஸ்டர். பாரத் திரைப்படத்தில் சித்தியாக, வீரா திரைப்படத்தில் அம்மாவாக, அருணாசலம் திரைப்படத்தில் பாட்டியாக, படையப்பா திரைப்படத்தில் அத்தையாக மற்றும் மீண்டும் சிவாஜி திரைப்படத்தில் அம்மாவாக நடித்தேன்.
வயதான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அருணாசலம் திரைப்படத்தில் ரஜினிகாந்தை நிறைய காட்சிகளில் திட்டுவது போல் நடிக்க நேர்ந்தது. இதற்காக ரஜினிகாந்த ரசிகர்களிடம் இருந்து எதிர்வினையாற்றப்பட்டது.
இந்நிலையில், அருணாசலம் திரைப்படத்தின் 100-வது நாள் விழாவின் போது எல்லோருக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், எனக்கு எதுவும் வழங்கவில்லை. அப்போது, அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்ததால், அந்த இடத்தை விட்டு செல்லலாம் என்று நினைத்தேன்.
ஆனால், அங்கு வேறு விதமாக எனக்கு மரியாதை செலுத்தப்பட்டது. எனது நடிப்பை பாராட்டி ரஜினிகாந்த எனக்கு செயின் பரிசாக கொடுத்தார்" என்று வடிவுக்கரசி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.