பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்று நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல போட்டியாளர்கள் பங்கேற்றிருந்ததால், நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா என்ற கேள்வி இருந்தாலும், நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு தினங்களிலேயே கடுமையான மோதலுடன் சூடுபிடிக்க தொடங்கியது.
இதனால் அவ்வப்போது பரபரபாக இருந்தாலும், கடந்த வாரம் பிரதீப் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஒரு வாரமாக சமூகவலைதளங்களில் பலரும் பிரதீப்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் பிரதீப்க்கு எதிராக மாயா, ஜோவிகா, ஐஷூ, பூர்ணிமா ஆகியோர் உரிமை குரல் எழுப்பியதை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு என்று கூறி கமல்ஹாசன் அவரை வெளியேற்றினார்.
ஆனாலும் தற்போதுவரை வெளியில் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டிலும் பிரதீப் குறித்த விவகாரம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. வெளியில் பிரதீப்க்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகியோர் பிரதீப்-க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். நேற்று ஒரு டாஸ்கில் விசித்ரா ஜோவிகா குறித்து சொன்ன ஒரு கருத்துக்கு விளக்கம் அளிக்கும்போது கூட பிரதீப் விவகாரம் குறித்த பேச்சு எழுந்தது.
இதில் விசித்ரா பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு எடுத்தது நான் தான் என்று சொன்னபோது, ஜோவிகா நீங்கள் இல்லை பெண்கள் பாதுகாப்பு என்று முதலில் சொன்னது கமல் சார் தான். நாங்கள் அதற்கான பாயிண்ட்களை மட்டுமே முன்வைத்தோம் என்று கூறியிருந்தார். இதனால் பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் கமல்ஹாசனா அல்லது இவர்கள் உரிமை குரல் எழுப்பியதா என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரும், தற்போதைய போட்டியாளர் ஜோவிகாவின் தாயாருமான வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில், பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு தான் ரெஸ்ரூம் போனதாக ஒப்புக்கொண்ட பின்னால் தான் அவர் வெளியேற்றப்பட்டார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு என்பதை நான் பயன்படுத்தவில்லை என்று ஜோவிகா தற்போது தெளிவுபடுத்திவிட்டார்.
வெளியில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப்க்கு முத்திரை குத்தி வெளியில் அனுப்பிவிட்டார்கள் என்று பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் இந்த வாரம் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் அவரது அரசியல் நிலைக்கே ஆபத்து வந்துவிடும்.
கமல்ஹாசன் பிரதீப்பை வெளியேற்றிய அன்றைக்கே கமல்ஹாசன் தெளிவாக எடுத்து சொல்லியிருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக பிரதீப்பை எதன் அடிப்படையில் கமல்ஹாசன் வெளியேற்றினார் என்று தெளிவுபடுத்தவில்லை என்றால் நானோ அல்லது எனது மகளோ வழக்கு தொடுப்போம். ஏனெனில் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்று ஜோவிகா கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அவள் மீது அப்படி ஒரு பெயர் வந்திருப்பது குறித்து சேனல் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“