தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை வரலட்சுமி சரத்குமார், பாலாவின் இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’படத்தில் நடித்த போது, எலும்பு உடைந்து மருத்துவமனை சென்றதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். சினிமாவில் நடிக்க விரும்பிய வரலட்சுமி சரத்குமாருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.
இந்த சூழலில்தான், நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தார். பாலா படம் என்றாலே, கடுமையாக வேலை வாங்குவார் என்பதால் பல நடிகர்கள் பயந்து நடுங்கிக்கொண்டு வேண்டாம் என்று மறுத்துவிடும் சூழ்நிலையில், வரலட்சுமி பாலா படத்தில் நடித்தார். கரகாட்ட கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வரலட்சுமியுடன் சசிகுமார், அமுதவாணன், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
தாரை தப்பட்டை படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் யதார்த்தமான நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்தைத் தொடர்ந்து, வரலட்சுமி வில்லியாக நடிக்கத் தொடங்கினார். விஜய்யின் சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து தமிழ் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
விக்ரம் வேதா, சண்ட கோழி 2, சர்கார், மாரி 2, இரவின் நிழல் ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் தன்னை நிரூபித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் கடைசியாக தெலுங்கில் வெளியான ஹனுமான் படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் என பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பை தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன், திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் விமரிசையாக நடைபெற்றது.
இதனிடையே, நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவர் தனது முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டதாகவும் இவர்களுகு 15 வயதில் ஒரு மகள் உள்ளதாகவும் தகவல் வெளியானது. நிக்கோலய் சச்தேவ் மற்று அவருடைய முதல் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதே நேரத்தில், இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் அளித்த நேர்காணலில் பழைய வீடியோ ஒன்று இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதில், தாரை தப்பட்டை படத்தில், சசிக்குமாரை விட்டு விட்டு ஆர்.கே. சுரேஷை திருமணம் செய்து கொள்வார். அப்போது, முதல் இரவு காட்சியில் வில்லன் ஆர்.கே. சுரேஷ், வரலட்சுமியை எட்டிமிதித்து தாக்குவது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சியின்போது நடந்த விஷயத்தை வரலட்சுமி கூறியுள்ளார்.
அந்த காட்சி படமாக்கப்பட்டபோது, வரலட்சுமி ஆர்.கே. சுரேஷிடம், “டேய் பாத்து மிதிடா ரொம்ப பீல் பண்ணி மிதிச்சிடாதேனு சொன்னேன். ஆனால், கேட்கல, மிதி மிதினு மிதிச்சான், அப்போவே கழுத்தில் ஒரு சத்தம் கேட்டது. ஆனால், அந்த ஷாட்டும் ஓகே ஆகாமல் அடுத்த ஷாட் எடுத்தாங்க, அந்த ஷாட் முடிஞ்சதும் பாலா தன் கழுத்தில் போட்டு இருந்த செயினை கழட்டி என் கழுத்தில் போட்டு பாராட்டினார். அப்போது நான் ஷாட் முடிச்சிடுச்சா சார் என்றேன், அவர் ஆமாம் என்றதும் மருத்துவமனைக்கு போய்ட்டுவரேன் என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்தேன்” என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.