/indian-express-tamil/media/media_files/2025/08/26/robo-shankar-2025-08-26-14-38-02.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை வர்ஷினி, தனது முதல் படமான 'சொட்ட சொட்ட நனையுது' அனுபவம் குறித்தும், சர்ச்சையை ஏற்படுத்திய ரோபோ சங்கரின் கருத்து குறித்தும் குமுதமுக்கு அளித்த ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் விஜே மற்றும் மாடலாக இருந்து தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ள வர்ஷினி, தனது பயணம் அவ்வளவு எளிதானது இல்லை என்றார். பல நிராகரிப்புகளையும் சவால்களையும் தாண்டிதான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய வர்ஷினி, பாரம்பரியமான காதல் கோட்பாடுகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் கூறினார். காதல் உணர்வு வரும்போது அதை அனுபவிப்பது மட்டுமே தனது நோக்கம் எனவும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.
'சொட்ட சொட்ட நனையுது' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரோபோ சங்கர், "இது என் ஜாதிக்காரன் படம்" என்று பேசினார். இந்தக் கருத்து சர்ச்சையான பிறகு, அவர் அதுபற்றி மேலும் விளக்கம் அளித்தார். "இது முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த படம். அதனால் தான் சொல்கிறேன், இது என்னுடைய நகைச்சுவை ஜாதிப் படம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் ரோபோ சங்கரின் இந்த கருத்து பற்றி வர்ஷினியிடம் கேட்டபோது, “அவர் அப்படி பேசியது எங்களுக்கு ஷாக்தான்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். பொதுவாக ரோபோ சங்கர் வேடிக்கையாகவும், ஜாலியாகவும் பேசக்கூடியவர் என்பதால், அந்த நேரத்தில் அப்படி பேசியிருக்கலாம் என்று வர்ஷினி குறிப்பிட்டார். மேலும், படத்தின் இயக்குனர் தான் இந்த கருத்துக்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்றும் கூறினார்.
ரோபோ சங்கர் தனது மகனை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்ததால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்படி பேசியிருக்கலாம் எனவும் வர்ஷினி யூகித்தார். இறுதியாக, அவர் நல்ல மனம் கொண்டவர் என்றும், யாரையும் காயப்படுத்த மாட்டார் என்றும் ரோபோ சங்கர் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தெரிவித்தார்.
மேலும் பிக் பாஸில் தனது பயணம் ஒரு கனவு நனவானது போல இருந்ததாக வர்ஷினி கூறினார். பொது வெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு கற்றுக்கொடுத்ததாகக் கூறினார். இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது அல்ல, அனைத்தும் இயல்பாக நடக்கிறது என்றும் வர்ஷினி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.