actress vijayalakshmi video: "ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்கிறேன். ரஜினிகாந்த் சார் எங்களுக்கு உதவுங்கள்" என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரிதாப வீடியோ பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஓடி சென்று உதவியுள்ளார். இதனை விஜயலட்சுமியே வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பூந்தோட்டம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், விஜய், சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்த இவர் கடைசியாக மீசைய முறுக்கு படத்திலும் நடித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் சர்ச்சையில் சிக்கிய இவர், பின்பு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோவில் ”உடல்நல குறைவு காரணமாக என்னை தற்போது மருத்துவமனையின் அனுமதித்துள்ளார்கள். பட வாய்ப்பிற்காக பெங்களூரு வந்தேன். ஆனால், தமிழ் நடிகை என்பதற்காகவே எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. என் உடல்நிலையும் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறியிருந்தார். அந்த வீடியோவை தொடர்ந்து அவருக்கு சில நடிகர், நடிகைகள் உதவ முன்வந்தனர்.
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு, விஜயலட்சுமி மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “ நான் இப்போது மிகவும் பண கஷ்டத்தில் இருக்கிறேன். ரஜினி சார் இந்த வீடியோவை பார்த்து எனக்கு உதவ முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் நரகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.” என்றார். இந்த வீடியோ அடுத்த சில மணி நேரத்திலேயே வைரலானது. விஜயலட்சுமியின் பரிதாப நிலையை கண்டு பலரும் மனம் உருகி போயினர்.
இந்நிலையில், இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துள்ளார். பார்த்தது மட்டுமில்லாமல் அவருக்கு உதவியும் செய்துள்ளார். இதனை 2 ஆவது வீடியோ மூலம் நடிகை விஜயலட்சுமியே உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “ வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதைப் பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்
அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.
ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.