/indian-express-tamil/media/media_files/2025/07/28/actress-yamuna-2025-07-28-18-02-50.jpg)
சினிமா வாழ்க்கை ஒரு நபருக்கு பெரும் புகழ் மற்றும் பணத்தை கொடுக்கும் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அத்தகைய புகழும், மதிப்பும் பெற்ற ஒரு நபரின் மீது போலியான வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவருடைய வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு நடிகை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
1987-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யமுனா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் பிரேமா என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திற்காக இவரது பெயரை யமுனா என இயக்குநர் கே. பாலச்சந்தர் மாற்றினார்.
தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் யமுனா அதிகமாக நடித்தார். கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த பெருமை யமுனாவிற்கு இருக்கிறது. குறிப்பாக, கடந்த 1994-ஆம் ஆண்டில் ஸ்ரீதேவி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'கோவிந்தா கோவிந்தா' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்தார். இப்படம், யமுனாவிற்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து, சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார். தமிழில் 'அம்மன்' சீரியலில் நடித்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவரது திரைத்துறை பயணம் சீராக சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம், இவரது வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
அந்த வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பெங்களூருவில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலுடன் சேர்த்து நடிகை யமுனாவும் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, சில நாட்களிலேயே இவர் மீது பாலியல் தொழில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம், யமுனாவின் சினிமா வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இதன் பின்னர், சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு யமுனாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை யமுனா, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என்றும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்ற காரணத்தினால் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த அன்று அந்த நட்சத்திர விடுதிக்கு தாம் செல்லவில்லை என்றும் யமுனா கூறியுள்ளார்.
பெரும் செல்வாக்கு மிகுந்த சிலர், தன்னை இந்த வழக்கில் குற்றவாளி போன்று சித்தரித்ததாக யமுனா குற்றம் சாட்டுகிறார். இந்தப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாகவும் யமுனா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளாக சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஒதுங்கி இருந்த யமுனா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.