ஆங்கிலத்தில் படிக்க...
மும்பையில் இயங்கி வரும் மத்திய திரைப்பட தணிக்கை அலுவலகம் மீது நடிகர் விஷால் ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த நிலையில், இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவல் நிகழ்வை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விஷாலுக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்புக்கான தணிக்கை சான்று வழங்குவதற்காக தணிக்கை அதிகாரிகள் தன்னிடம் ரூ6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் புகார் அளித்திருந்த நடிகர் விஷால் அதற்காக ஆதாரங்களையும் பதிவிட்டு இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள விடுத்திருந்தார்.
விஷாலின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பைக்கு அனுப்பப்படுவார் என்று அறிவித்திருந்தது. இந்த பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்,
மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நான் மனதார நன்றி கூறுகிறேன். தேவையான சமயத்தில் தக்க நடவடிக்கை எடுத்தற்காக மிக்க நன்றி மற்றும் ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும், ஊழலின் படிகள் அல்ல, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொண்டு வந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும், ஜெய் ஹிந்த் என்பது என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி உணர்வைத் தருகிறது, ”என்று பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் செப்டம்பர் 15-ந் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம், இந்தியில் நேற்று முன்தினம் (செப் 28) வெளியானது. சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் படத்தை தணிக்கைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால், தணிக்கை வாரிய அதிகாரிகள் படத்தைப் பார்க்க ரூ 3.5 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள ரூ 3 லட்சம் சான்றிதழ் வழங்கும் முன் கொடுக்க வேண்டும் என்றும் சில தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக விஷால் பகிர்ந்துள்ளார்.
விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அபய் சின்ஹா, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுதினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“