ராஷ்மிகாவின் மார்பிங் வீடியோ வைரல்; ’தனக்கு தொடர்பு இல்லை’ என வீடியோவில் தோன்றும் நிஜ பெண் விளக்கம்
"பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலம் குறித்து இப்போது அதிகம் பயப்பட வேண்டியிருக்கும்"; ராஷ்மிகா மந்தனா இடம்பெற்ற டீப்ஃபேக் வீடியோவில் தோன்றும் அசல் பெண் ஜாரா படேல் கருத்து
ஜாரா படேல், ராஷ்மிகா மந்தனாவை உள்ளடக்கிய தனது உள்ளடக்கம் டீப்ஃபேக் வீடியோவாக பயன்படுத்தப்பட்டது குறித்து பதிலளித்துள்ளார். (புகைப்படங்கள்: ஜாரா படேல், ரஷ்மிகா மந்தனா/ இன்ஸ்டாகிராம்)
ராஷ்மிகா மந்தனா, திங்களன்று, ஒரு வைரலான டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தார், அந்த வீடியோவில் அவரது முகம் மற்றொரு பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இருந்தது. அந்தப் பெண் பிரிட்டிஷ் இந்திய சமூக ஊடக பிரபலமான ஜாரா படேல் ஆவார். இதனையடுத்து ஜாரா படேல், சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துக் கொண்டார். அதில், ராஷ்மிகா தொடர்பான சர்ச்சையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் "நடந்தது என்னை ஆழமாக வருத்தமடையச் செய்துள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
இன்ஸ்டாகிராமில் ஜாரா படேல், “அனைவருக்கும் வணக்கம், யாரோ ஒருவர் எனது உடலையும் பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தையும் பயன்படுத்தி ஒரு டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது எனது கவனத்திற்கு வந்துள்ளது. அந்த டீப்ஃபேக் வீடியோவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, மேலும் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நான் மிகவும் கலக்கமடைந்து வருத்தமடைந்தேன். சமூக ஊடகங்களில் தங்களைத் தாங்களே சேர்த்துக்கொள்வதைப் பற்றி இப்போது அதிகம் பயப்பட வேண்டிய பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். தயவுசெய்து ஒரு படி பின்வாங்கி, இணையத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். இணையத்தில் உள்ள அனைத்தும் உண்மையானவை அல்ல. என்ன நடக்கிறது என்பதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ குறித்த ஜாரா படேல் பதிவு. (புகைப்படம்: ஜாரா படேல்/ இன்ஸ்டாகிராம்)
அசல் வீடியோவில் ஜாரா படேல் ஒரு லிஃப்ட் உள்ளே சிறிய கருப்பு வொர்க்அவுட் உடையை அணிந்து காணப்படுகிறார். வைரலான வீடியோவில், ஜாரா படேலின் முகம் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி ராஷ்மிகாவை போல திருத்தப்பட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த டீப்ஃபேக் வீடியோவுக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, “இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் ஆன்லைனில் பரப்பப்படும் டீப்ஃபேக் வீடியோவைப் பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று உண்மையில், மிகவும் பயமாக இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல, இன்று நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் உள்ளோம், ஏனெனில் தொழில்நுட்பம் மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று கூறினார்.
அமிதாப் பச்சன், மிருணால் தாக்கூர், நாக சைதன்யா, சின்மயி போன்ற பிரபலங்கள் ராஷ்மிகாவுக்கு ஆதரவாகவும், செயற்கை நுண்ணறிவு (AI) தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“