நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' திரைப்படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரூ. 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்ட நிலையில், இது குறித்து பெற்ற தடையில்லா சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியான நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் காட்சிகளை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
முன்னதாக, தனுஷை கண்டித்து நடிகை நயன்தாரா, மூன்று பக்க அளவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். குறிப்பாக, தன் மீதும், தன் வாழ்க்கை துணையான விக்னேஷ் சிவன் மீதும் கொண்ட வன்மத்தின் காரணத்தால் இவ்வாறு செயல்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு 'மனசினக்கரே' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நயன்தாரா அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படம் மூலம் தமிழிலும் நயன்தாரா தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும், ரஜினிகாந்துடன், 'சந்திரமுகி' திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில், நயன்தாரா வாழ்க்கை பயணம் மற்றும் திரைப்பயணம் ஆகியவற்றை விளக்கும் விதமாக 'Nayanthara: Beyond The Fairy Tale' என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதில், அவர் நடித்த ஆரம்ப கால திரைப்படங்கள் தொடங்கி அண்மையில் வெளியான ஜவான் திரைப்படத்தின் காட்சிகள் வரை இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் 'சந்திரமுகி' திரைப்படத்தின் காட்சிகள், நயன்தாராவின் ஆவணப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, அதன் தயாரிப்பாளர் ரூ. 5 கோடி கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட காட்சிகளை பயன்படுத்த நயன்தாராவிற்கு தடையில்லா சான்று வழங்கியதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பான விளக்கத்தை நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியது.