பாபு
47 நாள்கள் நீடித்த வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதும், முதல் படமாக கார்த்திக் சுப்பாராஜின் மெர்க்குரி வெளியானது. தயாரிப்பாளர்கள் சங்கம் தாராள மனதுடன் மெர்க்குரியை அனுமதித்ததாகதான் பலரும் நினைத்தனர். 'ஒன்றரை மாதமாக தியேட்டர் பக்கம் மக்கள் எட்டிப் பார்க்கலை. புதுசா படத்தை போட்டா மட்டும் வந்திடுவாங்களா என்ன' என்ற சந்தேகத்தில், முதலில் மெர்க்குரியை வெள்ளோட்டம் விட்டுப் பார்ப்போம் என்று வெளியிட்டதாகவே தெரிகிறது. படத்துக்கு சென்னை மாநகரில் உள்ள கூட்டம் பிற பகுதிகளில் இல்லை.
சென்ற வெள்ளிக்கிழமை மெர்க்குரி, முந்தல் என இரு நேரடி தமிழ்ப்படங்கள் வெளியாகின. அதில் முந்தல் இருக்கும் இடம் தெரியவில்லை. மெர்க்குரி சென்னையில் முதல் மூன்று தினங்களில் சுமார் 1.23 கோடியை வசப்படுத்தியிருக்கிறது. 243 திரையிடல்களில் இந்த வசூலை அப்படம் பெற்றிருக்கிறது.
இந்த வருடம் வெளியான படங்களில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமே அதிக ஓபனிங்கை பெற்றது. பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.38 கோடிகளை வசூலித்திருந்தது. இந்த வருடம் இதுவரை வெளியான முக்கிய திரைப்படங்களின் ஓபனிங் வசூல்...
தானா சேர்ந்த கூட்டம் - 2.38 கோடிகள்
கலகலப்பு 2 - 1.57 கோடி
ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் - 1.48 கோடி
ஸ்கெட்ச் - 1.39 கோடி
நாச்சியார் - 1.21 கோடி
இந்தப் படங்களுடன் ஒப்பிடுகையில் மெர்க்குரியின் ஓபனிங் வசூல் பரவாயில்லை. முதல் மூன்று தினங்களில் 243 திரையிடல்களில் 1.23 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஜனவரி வெளியான பிரபுதேவாவின் குலேபகாவலி திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 37.78 லட்சங்களை மட்டுமே வசூலித்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மெர்க்குரியின் வசூல் அபாரம்.
இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஆங்கில, தெலுங்குப் படங்களும் ஓபனிங்கில் கோடியை கடந்து சாதனை படைக்கின்றன. இரு வாரங்கள் முன்பு வெளியான ட்வைனி ஜான்சனின் ரேம்பேஜ் ஆங்கிலப் படம் முதல் மூன்று தினங்களில் 234 காட்சிகளில் 1.24 கோடியை வசூலித்தது. இது நாச்சியார் படத்தின் வசூலைவிட அதிகம்.
அதேபோல் ராம் சரணின் தெலுங்குப் படம் ரங்கஸ்தலம் 1.01 கோடியை முதல் மூன்று தினங்களில் வசூலித்தது. சென்றவாரம் வெளியான மகேஷ்பாபுவின் தெலுங்குப் படம் பரத் அனே நேனு முதல் மூன்று தினங்களில் சுமார் 222 திரையிடல்களில் 1.15 கோடியை வசூலித்துள்ளது.
இன்று பக்கா, தியா, பாடம் ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும், அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் ஆங்கிலப் படமும் வெளியாகியுள்ளன. தமிழ்ப்படங்களைவிட அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் படத்துக்கே அதிக திரையரங்குகள், காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தவாரம் அவெஞ்சர்ஸ் படமே முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலே உள்ள கணக்குகளிலிருந்து வேலைநிறுத்தத்தால் ஆங்கில, தெலுங்குப் படங்களுக்கான ஆடியன்ஸ் அதிகரித்திருப்பதையும், தமிழ்ப்பட ரசிகர்கள் இன்னும் திரையரங்குகளுக்கு முழுமையாக வரவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
காலா போன்ற பிரமாண்டப் படங்களின் வெளியீட்டுக்குப் பிறகே நிலைமை சரியாகும்.