/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-184256-2025-08-16-18-43-09.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘கூலி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆமிர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூலி’ திரைப்படம், வெளியான முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இதில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரச்சிதா ராம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாகத் தேடிக்கொண்டு வருகின்றனர்.
‘கூலி’ திரைப்படத்தில் ரச்சிதா ராம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல திருப்பங்களை கொண்ட அந்த வேடம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார் ரச்சிதா.
கன்னட சினிமாவில் இவர் முன்னணி நடிகையாக அறியப்படுகிறார். தமிழ்த் திரைப்படங்களில் ‘கூலி’ மூலம் தான் அவர் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘புல்புல்’ திரைப்படம் மூலம் ரச்சிதா ராம் திரைப்பட நடிகையாக தனது கரியரைத் தொடங்கினார். பின்னர், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன், சுதீப் உள்ளிட்ட கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இதனால் கன்னட திரைத்துறையில் ரச்சிதாவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.
ரச்சிதா ராம், 2022ல் வெளியான ‘சூப்பர் மச்சி’ திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் தனது நடிப்புத் தன்மையை அறிமுகப்படுத்தினார். இதற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல கன்னடத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையும், வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்து வரும் ரச்சிதா ராமின் சகோதரி, பிரபல சீரியல் நடிகையான நித்யா ராம். ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான ‘அவள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சன்டிவியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ மற்றும் ஜீதமிழில் வந்த ‘அண்ணா’ போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் நித்யா ராம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
ரச்சிதா ராமைப் பொறுத்தவரை, அவர் கன்னட திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தமிழ் சினிமாவில் ரச்சிதா ராம், தன்னுடைய அறிமுகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் செய்துள்ளார் என்பதே சிறப்பான ஒன்றாகும். அந்த வாய்ப்பிற்கு தகுந்த விதமாக, தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே “இவர் யார்?” என்ற ஆர்வத்தை உருவாக்கியுள்ளார்.
‘கூலி’ பட வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்த் திரைப்படங்களில் அவருக்கு மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.