Actor Ajith kumar: கடந்த ஆண்டு நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் சிலர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்தனர். இதையடுத்து அஜித், உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, `எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்' என்று அறிவித்தார். இதற்கிடையே, இன்று இதேபோல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை சற்றே வித்தியாசனமானது. சமீபகாலமாக நடிகர் அஜித்தின் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டு சிலர் உலாவி வந்தனர். இவர்களால் மோசடி சம்பவங்களும் நிகழ்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் வகையிலும், தனது மேனேஜர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையிலும் இந்த அறிக்கையை தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பி இருக்கிறார் அஜித்.
அதில், ``சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொதுவெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ எனது கட்சிக்காரரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்திற்கு வந்து உள்ளது. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
மேலும் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நிறுவனமோ தனி நபரோ அணுகினால் அந்தத் தகவலை உடனடியாக சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி யாராவது இத்தகைய நபர்களிடம் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துகொண்டுள்ளார். அஜித்தின் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான மேலாளராக பல்வேறு ஆண்டுகளாக அவருடன் சுரேஷ் சந்திரா பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.