நடிகர் அஜித் குமார், பள்ளிப் பருவத்திலிருந்தே ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வத்தினால், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார் என்பது பலரும் அறிந்த உண்மை.
இதனைத் தொடர்ந்து எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்துள்ளார். ஆளில்லா வான்வழி வாகனம் சேலஞ்சில் ‘தக்ஷா’அணி ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு உதவவும், தயாரிக்கும் முறைகள் பற்றி கற்றுத்தரவும் தன்னார்வத்துடன் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.
தல மற்றும் மாணவர்கள் கூட்டணியாக இணைந்து செயல்படும் இந்த அணி தற்போது அதி நவீன டுரோன் (drone) தயாரிப்பில் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் ‘யு.ஏ.வி மெடிகல் எக்ஸ்பிரஸ் 2018’ போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தான் அஜித் மற்றும் மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் டுரோன் இடம்பெற உள்ளது. இந்த டுரோன், நோயாளிகளின் சேம்பிள்களை விரைவாக ஆய்வுக் கூடத்திற்கு எடுத்துச்செல்ல உருவாக்கப்படுகிறது. இதனை இயற்கை சீற்றங்களி சிக்கிக்கொள்பவர்களைக் கண்டு பிடிக்கவும் உபயோகப்படுத்தலாம்.
இது போன்ற ஆளில்லா வான்வழி வாகன தயாரிப்புகள் பற்றிக் கற்றுத்தரும் அஜித்திற்கு எம்.ஐ.டி சம்பளம் அளிக்கிறது. ஒரு வகுப்பிற்கு ரூபாய் ஆயிரம் சம்பளமாக அளிக்கப்படுகிறது. இந்த சம்பளப் பணத்தை எம்.ஐ.டி-ல் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு நன்கொடையாக அளிக்குமாறு கூறியுள்ளார்.
இது குறித்து கல்லூரியின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தலைவர் டாக்டர். கே. செல்திகுமார் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்தப் போட்டியில் பல நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள். அதிலிருந்து 55 குழு மட்டுமே இரண்டாவது கட்டதிற்கு தேர்வு செய்யப்படும். இது போன்ற தயாரிப்புகளில் மிகுந்த அறிவாற்றல் கொண்ட அஜித் அவர்கள் இதில் பங்கேற்றுள்ளதால் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.” என்றார்.
தமிழகத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், தல அஜித் மாணவர்களின் மேம்பாட்டில் அதிகம் அக்கறை காட்டுவது ரசிகர்கள் இடையே கூடுதல் மதிப்பையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.