Viswasam Pre Release Business: பொங்கல் களத்தில் கவுன் - டவுனை முதலில் ஸ்டார்ட் செய்தது அஜீத்குமார் நடிப்பில் தயாராகும் விஸ்வாசம் படம்தான். அதன்பிறகு ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருகிறோம் என அறிவித்தது. இதனால் விஸ்வாசம் படம் தள்ளிப் போகலாம் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அசராமல், பொங்கலுக்கே பேட்ட-க்கு போட்டியாக விஸ்வாசத்தை இறக்குகிறார் தல!
பேட்ட-க்கு போட்டியாக களம் இறங்கும் விஸ்வாசம், பிசினஸில் நிற்க முடியுமா? என பலர் கேள்வி எழுப்பினர். ஆனாலும் அஜீத் தனது பலத்தை நிரூபிக்கவே செய்கிறார். அஜித்தின் விஸ்வாசம் தற்போதுவரை தமிழ்நாடு, இதர மாநிலங்கள், ஓவர்ஸீஸ் உட்பட மொத்தம் 62 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. அஜீத்துக்கு இளம் ரசிகர்கள் ஆதரவு இருப்பதையே இன்னமும் அவரது பட பிசினஸ் காட்டுகிறது. தவிர, ஹீரோயின் நயன்தாராவும் ஒரு பிளஸ்!
எனினும் இது சர்கார், சிங்கம் 2, சீமராஜா, ரெமோ படங்களுக்கு அடுத்து பெரிய பிசினஸ் என்கிறார்கள் திரை வட்டாரத்தில்! சர்கார் படம் 127 கோடிக்கும், சிங்கம் 2, சீமராஜா, ரெமோ படங்கள் முறையே 74, 69, 64 கோடிக்கும் வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது. 2.0 குறித்து இதில் பேசத் தேவையில்லை.
விஸ்வாசத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு, அதே பொங்கல் தினத்தில் களம் இறங்கும் பேட்ட-வை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் உள்பட பெரும்புள்ளிகள் பெரும் தொகைக்கு கொத்திக் கொண்டு போய்விட்டார்கள். தமிழகத்தில் மட்டும் பேட்ட பிசினஸ் 220 கோடி ரூபாய் என்கிறார்கள்.
இதுவரை சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களும், தல ரசிகர்களும் ஓரளவு இணைந்து செயல்படுவார்கள். முதல் முறையாக இருவர் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி அவர்கள் இடையே பதற்றத்தை தூவுகிறது. இந்த மோதலை ரஜினி, அஜீத் ஆகியோரின் ரசிகர்களைவிட விஜய் ரசிகர்கள் ஆர்வம் பொங்க ரசிக்கக் காத்திருக்கிறார்கள்.
திராவிட ஜீவா